Wednesday, January 2, 2013
சமூக அவலங்கள் ..
அரசியலுக்கு அப்பாற்பட்டு,தலைநகர் டெல்லியை, தலை குனிய வைத்த பாலியல் கொடுஞ்செயல் ,எதோ முதல் முறையாக நடந்தது போல சித்தரித்த மீடியாக்கள் ..!! , இதற்க்கு முன் பெண்களுக்கு எதிராக நடந்த பல கொடுஞ்செயல்களை மறைத்துவிட்டன .டெல்லிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்கள் ,ஒரு சில சமூக ஆர்வலர்களுக்கு மற்ற மாநிலங்களை நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை.இவர்களின் இந்த இலவச சேவையும் அடுத்த செய்தி கிடைக்கும் வரை மட்டுமே...
கிரிக்கெட் , சினிமாக்களுக்கு மட்டும் ஒன்று கூடும் இந்திய மக்கள் சற்று மாறுபட்டு 1947 ம் ஆண்டிற்கு பிறகு தெருக்களில் வந்து போராடியது ஆட்சியாளர்களிடையே கிலியை ஏற்படுத்தியது. அனைத்து கண்டனக் குரல்களும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சொல்ல..!! மறுபுறம் இதே போன்ற வன்மங்கள் தொடர்கதையாகவே உள்ளன . குற்றவாளிகளை தண்டித்துவிட்டால் இனி இது போன்ற பிரச்சனைகள் எழாது என்பது , நடைபாதையில் உள்ள முட்களில் ஒன்று காலணியையும் தாண்டி நம் பாதத்தில் பட்டு ரத்தம் வடிந்தால் , குத்திய முள்ளை தீயிலிட்டு கொளுத்தினால் ..! இனி கடக்கப் போகும் பாதையில் உள்ள முட்கள் நம் பாதங்களில் படாது என்பதைப்போல் கேலிக்கூத்தாக உள்ளது .
எல்லாப் பிரச்சனைகளுக்கும் சமூக அவலங்கள்தான் துணை போகின்றன . மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கம் ,மாறாக மதுபானக் கடைகளை திறந்து , திறம்பட நடத்துகிறது . பெண்களை போகப் பொருளாக சித்தரித்து, மீடியாக்கள் முதல் பல முதலாளிகள் வரை கல்லாக் கட்டுகின்றனர் .மக்களும் சளைத்தவர்கள் அல்ல , குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பெற்றோர்களே காசு பார்க்கும் மீடியாக்களிடம் விட்டு சீரழித்து விடுகின்றனர் . "வாடா வாடா பையா என் வாசல் வந்து போடா " ,"சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்கு விடத் தோணலையா ??? ", "ஆசையைக் காத்துல தூது விட்டு " இது போன்ற பாடல்களை Airtel super singer junior இல் பெண் குழந்தைகளை பாட வைத்ததுமில்லாமல் "இன்னும் கொஞ்சம் உணர்ச்சி பொங்க பாடியிருந்தால் நல்லா இருந்திருக்கும்" என குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள் இந்த சமூக அக்கறை கொண்ட மீடியாக்கள் .. அதற்கு துணை போகும் பெற்றோர்கள் "அடுத்த முறை நல்லா பாடுவா , இந்த முறை செலக்ட் பண்ணிடுங்க " என்று பிச்சை கேட்கிறார்கள் ...தவறுகள் இந்த சமூகத்திடம் தான் உள்ளது...
இலங்கையில் பாலியல் வன்முறைகள் , இனப் படுகொலைகள் நடந்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்த மீடியாக்களும்,மக்களும் இன்றாவது போராட முன்வந்தார்களே அதுவே, இவர்கள் பெண்களுக்கு செய்யும் பெரிய தொண்டு ..... சிலர் என்ன நடந்தால் நமக்கென்ன என்று சமூக வலைதளங்களில் தங்களது போடோஸ் போட்டுவிட்டு , "Awwwww SO sweetttttttttttttttttt ,Very Cuteeeeeeeeeeeeeee ,Very Nice NA ??? " என கெக்கப் பிக்கே என்று விளம்பரம் தேடுவதிலேயே குறியாய் இருக்கின்றனர், இதுதான் இவர்களின் மேலான சமூக அக்கறை . . இன்னும் சிலர் இதையும் அரசியலாக்கி காசு பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டனர் ..
எது எப்படியோ இந்திய மீனவர்கள் , தமிழக மீனவர்கள் என பிரித்தாளும் "மாண்புமிகு இந்திய அரசு" ,பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும் போது இந்தியப் பெண்களுக்கு , தமிழக பெண்களுக்கு என வெவ்வேறு சட்டங்கள் இயற்றாமல் இருந்தால்..!!! கோடான கோடி நன்றிகள் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment